உறக்கத்தில்நீ உதிர்க்கும்
புன்னகையில்
அர்த்தம் பெறுகிறது
என் காதல்...
எத்தனை கூட்டத்திலும்
என் மேல்
தனிமையை
எறிகிறது
உன் பார்வை...
ஒரு விழி
கவிதையும்..
மறு விழி
கத்தியுமாய்...
அந்தி மயங்கியதும்சாவதானமாய்
முகம் கழுவி
விளக்கேற்றினாய்..
பித்தேறித் திரிந்தேன்
நான்...
எரிந்தே போனது திரி...
நான்உறங்கையிலேயே
நீ தரும்
முத்தங்களில்
மோட்சமடைகின்றன
என் கனவுகள்...
நான்
உறங்குவதாய் நினைத்து
நீ தரும்
முத்தங்களில்
மோட்சமடைகின்றன
என் இரவுகள்...
தூக்கமற்ற நாட்களில்
என் தனிமையைச்
செதுக்குகிறது
உன் ஞாபகம்...
வலிகளை மௌனமாய்
அடைகாக்கிறது
இரவின் நிசப்தம்...
உறங்கும்
உன் இமைகளில்
அமர்ந்திருக்கிறது
என் கனவு...
சூறாவளியின்
மையத்தில் சுகமாய்
வசிக்கிறாய் நீ...
பரிதியில்
நான் படும்
அவஸ்தை புரியாமல்...
மதம் பிடித்த
யானையாய்
அலைகிறது மனம்...
உன்னை ஏற்றிக்
கொண்டதிலிருந்து...